தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள்.
பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கபட்டுள்ளன.
பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்குக் கருத்தில் நிறுத்த வேண்டும்.
பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத்தரத்தையும் பெருமையையும் காண இப்பாடல் தொகுதிகள் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.
எட்டுத்தொகை
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
பத்துப்பாட்டு
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்